1983 கருப்பு ஜூலை வன்முறையும் இலங்கை கற்றுக்கொண்ட படிப்பினைகளும


லங்கையின் அரசியல் வரலாற்றில் காலாகாலமாக சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்றுவரும் பாகுபாடுகளை திட்டமிடப்பட்ட சதியாகவே கருதமுடிகிறது. பிரித்தானிய காலனித்துவ கால பிரித்தாளும் கொள்கை இலங்கையர்களிடையே மிக ஆழமான பிரிவினையை ஏற்படுத்திவிட்டது. அதன் விளைவாக சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற கட்டமைப்பு முக்கியம் பெற்றது. மேலும், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவினை அரசியல் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஊடுருவியது. அதன் விளைவாக அரச உயர் பதவிகளை வழங்குதல், பல்கலைக்கழக அனுமதி, சிவில் சேவை, அரசாங்க வேலைகள் என பல வழிகளில் சிறுபான்மை மக்கள் பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இவ்வாறான பாகுபாடுகள்  மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தில் இட ஒதுக்கீடு  போன்ற காரணிகள் சிங்கள-தமிழ் மக்களிடையே மோதலுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தன.  1970களில் சிங்கள-தமிழ் மக்களிடையே மோதல்கள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஆயுதமேந்திய இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதனால் சிவில் யுத்தம் ஆரம்பமானது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து 1977இல் தொடர்ச்சியான இனக் கலவரங்களும் நிகழ்ந்தன..


கருப்பு ஜூலை வன்முறை


“கருப்பு ஜூலை” என்ற பதமானது 1983 ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் மக்களை இலக்கு வைத்து இடம்பெற்ற படுகொலை மற்றும் கலவரங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான பெயராகும். 1983 ஜூலை 23ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இலங்கை இராணுவ வீரர்கள் பலியானதையடுத்து இக்கலவரம் ஆரம்பமானது. 1983 ஜூலை 24 இரவு தலைநகர் கொழும்பில் தொடங்கி கலவரம் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.   


மூலம் : pearlaction.org


பல நாட்கள் இடம்பெற்ற இக்கலவரத்தில் சிங்களக் கும்பல்கள் தமிழர்களை  இலக்கு வைத்து சொத்துக்களுக்கு எரிêட்டல், கொலை, கொள்ளையிடல், தாக்குதல்கள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டனர். தேர்தல் இடாப்பு பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு தழிழர்கள் தேடித் தேடி தாக்கப்பட்டதோடு அவர்களது சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறையால் 400 முதல் 3000 வரையானோர் கொல்லப்பட்டனர். மேலும், தமிழர்களுக்கு சொந்தமான 8000 வீடுகளும் 5000 கடைகளும் அழிக்கப்பட்டன.  150,000 தமிழ் மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.  இக்கலவரத்தால் 300 மில்லியன் ரூபா வரை இழப்பு ஏற்பட்டது. 


இந்த வன்முறை சம்பவம் இலங்கைக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அபகீர்த்தியை உண்டாக்கியது.  ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மை மக்கள் இவ்வாறாக கொன்று குவிக்கப்பட்டு அவர்களது உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டமை சட்டவாட்சித் தத்துவத்தை(Rule of Law) மறுதலிக்கச் செய்துள்ளது. மேலும், அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்ட சமத்துவம், சுதந்திரம், அடிப்படை உரிமைகள் ஆகியன சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. Amnesty International, Human Rights Watch போன்ற பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கருப்பு ஜூலை வன்முறையினை கடுமையாக விமர்சித்ததோடு அதனை ஒரு இனச்சுத்திகரிப்பு (Genocide) செயற்பாடாகவே பார்க்கின்றன. 


இலங்கை கற்றுக்கொண்ட படிப்பினைகள்


கருப்பு ஜூலை வன்முறையினை தடுத்து நிறுத்த J.R.. ஜயவர்தன தலைமையிலான அரசாங்கம் தவறியது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் பெரும்பான்மையின கலகக்காரர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தன. மேலும், சிறைச்சாலைகளிலிருந்த தமிழ் அரசியல் கைதிகள் பொலிஸாரின் உதவியோடு சக கைதிகளால் கொல்லப்பட்டனர். இவ்வாறாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆயுதக் குழுக்களில் இணைந்தனர். அதன் விளைவாக இலங்கை 3 தசாப்த கால சிவில் யுத்தத்துக்கு முகங்கொடுத்தது. 2001ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரத்துங்க கருப்பு ஜூலை வன்முறை தொடர்பில் ஆராய ஆணைக்குழு ஒன்றினை(Truth  Commission) நிறுவினார். மேலும், 2004ஆம் ஆண்டு கருப்பு ஜூலை நினைவேந்தலில் சந்திரிக்கா குமாரத்துங்க அத்தகைய கலவரம் இடம்பெற்றமைக்காக இலங்கையர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டமை குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு இலங்கை சிவில் யுத்தம் நிறைவடைந்த போதிலும் சிங்கள-தமிழ் மக்களிடையே இருக்கின்ற பிழையான புரிந்துணர்வுகளை நீக்கி முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த இன்றுவரை இயலவில்லை. மேலும், நிலைமாறுகால நீதி செயற்பாடுகளும் இதுவரையில் éர்த்தியடையவில்லை.


அரசியல் இலாபங்களுக்காக இலங்கை மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி அதில் இலாபம் பெறும் கீழ்த்தரமான அரசியலே கருப்பு ஜுலை உட்பட 3 தசாப்த உள்நாட்டு யுத்தத்துக்கும் வழிகோலியது. அவற்றால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை இலங்கையர்கள் என்றும் மறந்துவிட இயலாது. இத்தகைய கசப்பான அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் தடுப்பது எமது கடமையாகும். எனவே, இன்றைய இளைஞர்கள் என்ற வகையில் ஜனநாயக விழுமியங்களை விரும்புகின்ற மற்றும் அதனை மதிக்கின்ற சந்ததிகளாக நாம் இருக்க வேண்டியது எமது கடமையும் பொறுப்புமாகும். அத்தோடு, இலங்கையின் ஜனநாயகப் பண்புகளை பாதுகாக்கவும் வளர்க்கவும் எமது பங்களிப்பை வழங்குவது இன்றியமையாதது.   



- ரஸ்னா பாருக்


Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்