இலங்கை இளைஞர்கள் மற்றும் இனவாதம்

 


ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி நடந்த கலந்துரையாடலில் ரஸ்னா பாரூக்கின் உரை.

பின்னணி


இலங்கையின் இனப் பிரச்சினையானது திடீரென தோற்றம் பெற்ற ஒன்றல்ல. மாறாக பிரித்தானியருடைய பிரித்தாளும் கொள்கையின் விளைவாக உருவானது. பிரித்தானியர் உருவாக்கிய சட்டவாக்கக்கழகத்தில் கரைநாட்டு சிங்களவர், மலைநாட்டுச் சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் என இனவாரியாக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை இலங்கையின் இனப் பிரச்சினைக்கு வித்திட்டது. ஆரம்ப கட்டங்களில் சிங்களவர்களை விட தமிழர்களுக்கு பிரித்தானியர் அதிக சலுகைகளை வழங்கினர். அரச உயர் பதவிகள், உயர் கல்வி வாய்ப்புக்கள், சிவில் சேவை பதவிகள் ஆகியவற்றில் தமிழர்கள் அதிக வாய்ப்புக்களைப் பெற்றனர். இது சிங்கள மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது. 


சிங்கள மறுமலர்ச்சி இயக்கங்கள் தோற்றம் பெற்றதையடுத்து குறிப்பாக “அனகாரிக தர்மபால” இவற்றுக்கு எதிராக சிங்களத் தேசியவாதக் கருத்துக்களை முன்வைத்தார். “இந்த உலகத்தில் சிங்கள இனம் சிறுபான்மையானது. தமிழர்கள், முஸ்லிம்களைப் போல அன்றி  சிங்களவர்களுக்கு இலங்கையைத் தவிர வேறு நாடு கிடையாது. எனவே, இலங்கை சிங்களவர்களுக்கு உரித்தான பௌத்த நாடு” போன்ற அனகாரிக தர்மபாலவின் கருத்துக்கள் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டின. 1915 சிங்கள முஸ்லிம் கலவரத்துக்கு இக்கருத்துக்களே அடிப்படையாக அமைந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சிவில் சேவை, அரச உயர் பதவிகள், பல்கலைக்கழக நுழைவு ஆகியவற்றில் 80 வீதத்துக்கும் அதிகமாக வட கிழக்கை சேர்ந்த தமிழர்களே இருந்தனர். சனத்தொகையில் அதிகமாக இருந்த சிங்களவர்களுக்கு இது பிரச்சினையாக இருந்தது. 


எனவே, இலங்கை சுதந்திரம் அடைந்த பின் சிங்கள பெரும்பான்மையினரை திருப்திப்படுத்தும் நோக்கில் பல சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்பட்டன. உதாரணமாக தனிச் சிங்களச் சட்டம்(1956), பிரஜாவுரிமைச் சட்டம்(1948), அரச தொழில் வாய்ப்பு மற்றும் பல்கலைக்கழக நுழைவு ஆகியவற்றில் இன விகிதாசார அடிப்படையில் வாய்ப்பை வழங்கல் என பல விதங்களில் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடுகள் காட்டப்பட்டன. 


1970, 1980களில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான பிரிவினை தீவிரமடைந்தது. இலங்கை அதிகபடியான வன்முறைகள் இக்காலகட்டத்திலேயே பதிவாகின. இதன் விளைவாக சிங்களத் தேசியவாதம், தமிழ் தேசியவாதம், முஸ்லிம் தேசியவாதம் ஆகியன தோற்றம் பெற்றன. அவற்றுள் சிங்களத் தேசியவாதம், தமிழ் தேசியவாதம் ஆகியன பிரதான பேசுபொருளாகின. இதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்று 3 தசாப்தங்களாக இலங்கையில் சிவில் யுத்தம் இடம்பெற்றது. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 1987இல் மாகாண சபைகள் முறை கொண்டுவரப்பட்டாலும் கூட அது வெற்றியளிக்கவில்லை. 


இளைஞர்களாக எமது பொறுப்பு


2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து இன்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய போதிலும் இன்றுவரை முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்;(UNDP) The National Youth Survey என்ற தலைப்பில் இலங்கையில் மேற்கொண்ட ஆய்வில் “இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அதனூடாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடையவும் பொருத்தமான தரப்பினர் இளைஞர்கள் ஆவர். அவர்களை அரசாங்கம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என பரிந்துரை செய்துள்ளது. இலங்கை சனத்தொiயில் 23.2 வீதமானோர் இளைஞர்களாவர். அதாவது, 4.46 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர். மேலும், இந்த ஆய்வின் முடிவில் இலங்கை இளைஞர்களில் 54.1 வீதமானோருக்கு ஏனைய மதத்தையோ, இனத்தையோ சார்ந்த நெருங்கிய நண்பர்கள் இல்லை என்ற விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது, இதற்கு பிரதான தடையாக மொழி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 



எமது எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான ஒரு நாட்டை கையளிக்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். அவ்வகையில், இளைஞர்கள் என்ற வகையில் இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் பாரிய பொறுப்பு எமக்குக் காணப்படுகின்றது. அவ்வகையில்,



  • ஜனநாயகத்தை விரும்பக் கூடிய ஜனநாயக விழுமியங்களை(Democratic Values) மதிக்கக் கூடிய ஜனநாயகப் பண்புகளை வளர்க்கக் கூடிய இளைஞர் சமுதாயமாக நாம் இருக்க வேண்டியது அவசியம்.


  • சட்டவாட்சியை(Rule of Law) மதிக்கக் கூடிய மற்றும் வலியுறுத்தக் கூடிய இளைஞர்களாக இருத்தல்.


  • இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை அதிகரித்தல்.


  • கொள்கை உருவாக்கம் மற்றும் தீர்மானம் எடுத்தல் செயற்பாடுகளில் இளைஞர்களையும் பங்குகொள்ளச் செய்தல் அல்லது அத்தகைய பதவி நிலைகளில் இளைஞர்களை உள்வாங்குதல்.


  • இனப் பிரச்சினையின் அடிப்படையான தொடர்பாடல் திறன்களை வளர்த்துக்கொள்ளல். குறிப்பாக, வடக்கின் பிரச்சினையை அவர்களுடைய தரப்பிலிருந்தும் தெற்கின் பிரச்சினையை அவர்களது தரப்பிலிருந்தும் புரிந்துகொள்ளும் மனநிலையை உடையவர்களாக இருத்தல்.


  • கலாசாரப் பல்வகைமையை மதிக்கக் கூடிய மற்றும் விரும்பக் கூடிய இளைஞர் சமுதாயமாக நாம் இருத்தல்.


போன்ற செயற்பாடுகளினூடாக இளைஞர்கள் என்ற வகையி;ல் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க எமது பங்களிப்பை வழங்கலாம்.



-ரஸ்னா பாருக் 



Comments

Popular posts from this blog

இலங்கை தன் அரசுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று ஏற்றுக் கொண்டது எவ்வாறு?

ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත අහෝසි කළ යුත්තේ ඇයි?

உலக சமாதான தினம்