நீதிக்கான நீள் பயணம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் நிறைவுறாத போராட்டம்
ஒவ்வொரு
ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆம் திகதியன்று, ‘வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்' உலகளவில்
கடைப்பிடிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களைப் பொறுத்தவரை, 'காணாமல் ஆக்கப்படுவது' என்பது கடந்த காலத்தோடு முடிந்துபோன
ஒரு நிகழ்வு அல்ல; அது பல
ஆண்டுகளாகவும், பல
சந்தர்ப்பங்களில் பல தசாப்தங்களாகவும் நீடிக்கும் ஒரு விடை கிடைக்காத கேள்வியாகவே
உள்ளது.
இலங்கையின்
வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில், காணாமல்
போனவர்களின் தாய்மார்களும் உறவினர்களும், அந்த
நிச்சயமற்ற நிலையை உண்மை மற்றும் நீதிக்கான ஒரு தொடர்ச்சியான போராட்டமாக
மாற்றியுள்ளனர். இந்த ஆண்டின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, அக்குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில்
நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் ஒன்றுகூடினர். காணாமல் போனவர்களை நினைவுகூருவது
மட்டுமல்லாமல், இலங்கை
அரசிடமிருந்தும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் பதில்களைக் கோருவதும் அந்த
ஒன்றுகூடலின் நோக்கமாகும்.
வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்?
'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான
சர்வதேச தினம்' ஆண்டுதோறும்
ஆகஸ்ட் 30 அன்று கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும்
வலிந்து அல்லது விருப்பத்திற்கு மாறாகவோ காணாமல் ஆக்கப்பட்டவர்களை
குறித்தும், பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பத்தினரும் சாட்சிகளும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் மற்றும் துயரம்
குறித்தும் நிலவும் தொடர்ச்சியான கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது
டிசம்பர் 2010-இல் நிறைவேற்றிய 65/209 என்ற தீர்மானத்தின் மூலம் இந்நாளை
உருவாக்கியது.
வலிந்து
காணாமல் ஆக்கப்படுதல் என்பது, அரச அதிகாரிகளால் அல்லது அரசின்
அனுமதி, ஆதரவு அல்லது உடந்தையுடன்
செயல்படும் நபர்களால் ஒருவர் கைது செய்யப்படுதல், தடுத்து
வைக்கப்படுதல் அல்லது கடத்தப்படுதல், பின்னர்
அவரது சுதந்திரம் பறிக்கப்பட்டதை ஏற்க மறுத்தல் அல்லது அவரது நிலை மற்றும்
இருப்பிடம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிட மறுத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட
நபர் சட்டத்தின் பாதுகாப்பிற்கு அப்பாற்பட்ட நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
ஆனால், ஒரு நபர் அழைத்துச் செல்லப்படுவதோடு
காணாமல் ஆக்கப்படுதல் முடிந்துவிடுவதில்லை. அது அந்த
நபரின் குடும்பத்தினருக்கு தொடர்ச்சியான உரிமை மீறலாக மாறுகிறது. தங்களது
அன்புக்குரியவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா, எங்கு
தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு
என்ன நேர்ந்தது என்பன குறித்து எந்தத் தகவலும் இல்லாமல் குடும்பத்தினர் தவிப்பில்
விடப்படுகின்றனர். இந்த நீடித்த நிச்சயமற்ற நிலை ஆழ்ந்த
மனவேதனையின் ஒரு வடிவம் என ஐக்கிய நாடுகள் சபை வர்ணிக்கிறது.
எனவே, இந்நாளின் முக்கியத்துவம் என்பது
வெறும் நினைவுகூருதல் மட்டுமல்ல; பாதிக்கப்பட்டவர்களுக்கும்
அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் இத்தகைய நிகழ்வுகள்
மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் ஆகிய உரிமைகளை இது நினைவூட்டுகிறது.
2026ஆம் ஆண்டு சர்வதேச அளவில் குறிப்பாக
முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். வலிந்து
காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச
உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 20 ஆண்டுகள்
நிறைவடைவதை இந்த ஆண்டு குறிக்கிறது. இந்த ஆண்டின் நினைவுகூரலை ஐக்கிய நாடுகள் சபை “பாதிக்கப்பட்டவர்கள்
முதலில். உடனே செயல்படுங்கள்.” என்ற கருப்பொருளின் கீழ், பாதிக்கப்பட்டவர்களை மையமாகக்
கொண்டு முன்னெடுக்கிறது.
எனினும், இலங்கையில் உள்ள குடும்பங்களைப்
பொறுத்தவரை, நடவடிக்கைக்கான
இந்த அழைப்பு ஒன்றும் புதிதல்ல.
இலங்கை:
உலகின் தீர்க்கப்படாத காணாமல் ஆக்கப்பட்டோர் நெருக்கடிகளில் ஒன்று
இலங்கை, உலகில் நீண்டகாலமாகத்
தீர்க்கப்படாமல் தொடரும், மிகப்
பரவலான வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோர் நெருக்கடிகளில் ஒன்றைக்
கொண்டுள்ளது. நாட்டின் பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்ற அரசியல் வன்முறைகள்
மற்றும் ஆயுத மோதல்களின் போது, வலிந்து
காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தெற்கில் இடம்பெற்ற இரண்டு
இளைஞர் கிளர்ச்சிக் காலங்களும், வடக்கு
மற்றும் கிழக்கில் இடம்பெற்ற போரும் அடங்கும்.
வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டோர் அல்லது தன்னிச்சையற்ற முறையில் காணாமல் போகச்
செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பவங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது
இடத்தில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.அதிகாரபூர்வ
புள்ளிவிவரங்களே தீர்க்கப்படாமல் தொடரும் இந்தப் பிரச்சினையின் ஆழத்தை
வெளிப்படுத்துகின்றன. இலங்கை தொடர்பான 2025ஆம் ஆண்டு
ஆய்வின்போது, வலிந்து
காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு,
2024ஆம் ஆண்டு இறுதி வரையில் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்திடம் 16,966 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகக்
குறிப்பிட்டது.மேலும், காணாமல்
போனோர் தொடர்பான முழுமையான
தேசியப் பதிவேடு இல்லாமை, முன்னைய
ஆணைக்குழுக்களிடமிருந்து பெறப்பட்ட பதிவுகளைச் செயலாக்குவதில் ஏற்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றம், அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட
நபர்களின் நிலை
மற்றும் இருப்பிடம் தொடர்பான போதிய தகவல்கள் இல்லாமை ஆகியவை குறித்தும் குழு கவலை
தெரிவித்தது.
இலங்கை, வலிந்து காணாமல்
ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை 2016ஆம் ஆண்டு அங்கீகரித்ததுடன், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலைக்
குற்றமாக்கும் உள்நாட்டுச்
சட்டத்தையும் 2018ஆம் ஆண்டு
இயற்றியது. இதன் அடிப்படையில், காணாமல்
போன ஆட்கள் தொடர்பான அலுவலகமும் இழப்பீட்டுக்கான அலுவலகமும் நிறுவப்பட்டன.
ஐக்கிய
நாடுகள் சபையின் குழு, விசாரணைகளில்
தலையீடு மற்றும் தடைகள் ஏற்படுத்தப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், நீதித்துறை
மற்றும் வழக்குத் தொடரும் செயன்முறைகளின் சுயாதீனம், அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், குறிப்பாக பெண்கள், கண்காணிப்பு, அச்சுறுத்தல்
மற்றும் மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து
கவலை தெரிவித்துள்ளது.
மேலும், காணாமல்
ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள், விசாரணைகளில்
செல்வாக்கு செலுத்தக்கூடிய பதவிகளில் நியமிக்கப்படக் கூடாது என்றும்
ஐக்கிய நாடுகள் சபையின் குழு வலியுறுத்தியுள்ளது. 2026 ஆகஸ்ட் 30ஆம் திகதி
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட செய்தியிலும், இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது
அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியத் தொடர்ந்து காத்திருக்கின்றன என்பது
சுட்டிக்காட்டப்பட்டது.
எனினும், காணாமல்
போன தங்களது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியபடி பல ஆண்டுகளாக வீதியோரங்களில்
நின்று போராடி வரும் தாய்மார்களைப் பொறுத்தவரை, அடிப்படைப் பிரச்சினை மிகவும் எளிமையானது: நிறுவனங்கள்
பதில்களை அளிக்க வேண்டும்.
“நீதிக்கான நீள் பயணம்”
இந்த ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க வடிவத்தைப் பெற்றிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் “நீதிக்கான நீள் பயணம்” என்ற தொனிப்பொருளில் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இம்மாநாட்டில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சர்வதேச மனித உரிமைப் பிரதிநிதிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பலரும் ஒன்றுகூடினர். இந்த மாநாடு ஒரு நாள் நினைவேந்தல் நிகழ்வாக மாத்திரம் அமையவில்லை. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்தின் வரலாற்றை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் அதனை எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகவும் இது அமைந்தது.
இன் நிகழ்வு, நூற்றுக்கணக்கான
தாய்மார்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் வீரசிங்கம்
மண்டபத்திலிருந்து தந்தை செல்வா கலையரங்கம் வரை ஒன்றாக அணிவகுத்துச் சென்றதுடன்
ஆரம்பமானது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட
வெள்ளை நிற வாகனமொன்று இந்தப் பேரணிக்கு முன்னணியாகச் சென்றது.
காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையும் சர்வதேச நீதியும் கோரி
உறவினர்களும் தாய்மார்களும் முழக்கங்களை எழுப்பினர். அதேவேளை, காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கையாளும் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் உள்நாட்டு பொறிமுறைகள் மீது
அவர்கள் தமது கடுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். குறிப்பாக, 2009ஆம் ஆண்டு
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்களுக்கு
என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்காத நிலையையும் அவர்கள்
தொடர்ந்து சுட்டிக்காட்டினர்.
நிகழ்வில் “அழிக்கப்படும் சாட்சியங்கள்” என்ற
வெளியீடும் வெளியிடப்பட்டது. மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்ட இந்நூல், தமது
பிள்ளைகளைத் தேடி பல ஆண்டுகளாக அலைந்து திரிந்த பின்னரும் எந்தவொரு பதிலும்
கிடைக்காமல் இறந்துபோன தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் வாழ்க்கையையும் அவர்களின்
தேடலையும் பதிவு செய்துள்ளது.
மேலும், வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் விபரங்களைப் பதிவு செய்யும் மற்றுமொரு வெளியீடும்
அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னுமொரு வெளியீடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கடந்த 17 ஆண்டுகளாக
முன்னெடுத்து வரும் போராட்டத்தின் வரலாற்றை ஆவணப்படுத்துகிறது. அவர்களால்
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள், அதிகாரிகளுடனான
சந்திப்புகள், நடத்தப்பட்ட
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்
இடம்பெற்ற இடங்கள் மற்றும் இந்த நீண்ட போராட்டத்தின் போது அவர்கள் எதிர்கொண்ட
துன்பங்கள் உள்ளிட்ட அனைத்தும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாய்மார்கள்
இந்த மாநாட்டின் நோக்கங்களை பின்வருமாறு
விளக்கினர்:
1. உள்நாட்டுப் பொறிமுறைகளின் தோல்வியை
ஆராய்தல்
சிறிலங்காவில்
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களைக் கையாள்வதில் உள்நாட்டுப் பொறுப்புக்கூறல்
பொறிமுறைகளின் தொடர்ச்சியான தோல்வி, ஆழமாக
வேரூன்றிய தண்டனையின்மைக கலாச்சாரம் மற்றும் நீடித்த நீதித்துறைச் செயல்முறைகளை
ஆராய்வது.
இதன்
விளைவாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடையே - குறிப்பாகத் தாய்மார்களிடையே
சிறிலங்காவின் நீதி அமைப்பின் மீதும், உண்மை, நீதி மற்றும் பயனுள்ள பரிகாரங்களை
வழங்கும் அதன் திறனின் மீதும் ஏற்பட்டுள்ள நம்பிக்கைச் சரிவை வெளிப்படுத்துவது.
2. பிரச்சினையை சர்வதேச அளவில்
முன்னிறுத்துதல்
அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை, தூதரகங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் மற்றும்
உலகளாவிய மனித உரிமைகள் பங்குதாரர்களை ஈடுபடுத்துவதன் மூலம், இலங்கையில் இடம்பெற்ற வலிந்து
காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான பிரச்சினையை சர்வதேச அரங்கில் முன்னிறுத்துவது.
3. அர்த்தமுள்ள
சர்வதேச நடவடிக்கையை வலியுறுத்துதல்
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் பயனுள்ள பரிகாரங்களை உறுதிப்படுத்துவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் அரத்தமுள்ள மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது.
4.தாய்மார்களின்
போராட்டத்தை ஆவணப்படுத்தி மதிப்பளித்தல்
காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் குடும்பங்களின் நீண்டகால அமைதியான
போராட்டத்தை ஆவணப்படுத்தி பாதுகாத்தல்,
உண்மையைத்
தேடுதல், பொறுப்புக்கூறலை
உறுதிப்படுத்துதல் மற்றும் நீதிக்கான அணுகலை வலுப்படுத்துவதற்காக சர்வதேச
ஒத்துழைப்பை ஊக்குவிப்பது.
5.பாதிக்கப்பட்டவர்களை
மையமாகக் கொண்ட பொறிமுறைகளை வலியுறுத்துதல்
சர்வதேச
மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க, சுதந்திரமான மற்றும் பாதிக்கப்பட்டவர் களை மையமாகக் கொண்ட
உண்மை தேடுதல் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை களுக்கான பரிந்துரைகளை
முன்வைப்பது.
இதன்
மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனான சர்வதேச ஒற்றுமையையும் வலுப்படுத்துவது.
6. தாய்மார்களின்
தைரியத்தையும் மனவுறுதியையும் கெளரவித்தல்
காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் தொடர் போராட்டத்தையும், தைரியம், மனவுறுதி
மற்றும் நீதிக்கான அவர்களது நீடித்த தேடலையும் மதிப்பளித்தல்.
உண்மை மற்றும்
நீதிக்கான அவர்களின் போராட்டம். உலகளாவிய மனித உரிமைகள் இயக்கத்திற்குத் தொடர்ந்து
உத்வேகம் அளித்து வருகிறது என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைப்பது.
7. மனிதப்
புதைகுழிகள் மற்றும் அட்டுழிய இடங்கள் தொடர்பான விசாரணைகளின் அவசியத்தை
வலியுறுத்துதல்
பாரிய மனிதப் புதைகுழிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அட்டூழிய இடங்கள் தொடர்பாக சுதந்திரமான. பாரபட்சமற்ற மற்றும் சர்வதேச ஆதரவுடனான விசாரணைகளின் முக்கியத்து வத்தை எடுத்துரைப்பது.
அத்தகைய
விசாரணைகள் மூலம்: சான்றுகளின்
பாதுகாப்பு, தடயவியல்
நேர்மை, உண்மையை
அறியும் குடும்பங்களின் உரிமை, பொறுப்புக்கூறல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது.
8. சர்வதேச
பொறுப்புக்கூறலுக்கான அழைப்பு
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளை, சுதந்திரமான சர்வதேச பொறுப்புக்கூறல் செயல்முறைகள் மூலம் சர்வதேச சமூகம் உரிய முறையில் அணுகி பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது.
பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் பாதிப்புக்குள்ளான சமூகங்களுடன் சர்வதேச சமூகம் ஒற்றுமையாக நிற்கவும், கொடூரக்
குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும். சர்வதேச சட்ட மீறல்களுக்குப்
பொறுப்பானவர்கள் பொருந்தக்கூடிய சர்வதேச சட்டத் தரங்களுக்கு இணங்கப் பொறுப்பேற்கச்
செய்யப்படுவதை உறுதி செய்யவும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
மாநாட்டிலிருந்து
ஒலிக்கும் குரல்கள்: உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நடவடிக்கை
மாநாட்டில்
கலந்துகொண்ட முக்கியமான விருந்தினர்களில் ஒருவராக, ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து
அல்லது தன்னிச்சையற்ற காணாமலாக்கல்கள் தொடர்பான செயற்குழுவின் உறுப்பினரான அனா
லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் கலந்து கொண்டார். உலகளாவிய
ரீதியில் 66,000-க்கும்
மேற்பட்ட காணாமலாக்கல் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை செயற்குழு
பரிமாறியுள்ளதாகவும், இலங்கையில்
மாத்திரம் கடந்த பல ஆண்டுகளில் 12,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார். 1987–89 காலப்பகுதியில்
காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் தொடர்பான சம்பவங்களும்
பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அனா லொரேனா சுட்டிக்காட்டினார். காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் எதிர்கொண்டு வரும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள்
மற்றும் பொருளாதாரத் தடைகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தினார். எந்தவொரு
தாயும் உண்மையை அறியாமலேயே உயிரிழக்கக் கூடாது என்று
அவர் வலியுறுத்தினார். மேலும், தாய்மார்களும் உறவினர்களும் ஒன்றிணைந்து தொடர்ந்து
முன்னெடுத்து வரும் போராட்டத்தையும் அவர் பாராட்டினார். இந்த ஒற்றுமையே அரசுக்கு
முன்னிலையாக உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர்
குறிப்பிட்டார். வலிந்து
காணாமலாக்கல்களுக்கு தண்டனையின்மை தொடர்வது, இத்தகைய காணாமலாக்கல்கள் அனுமதிக்கப்படுகின்றன என்ற ஆபத்தான
செய்தியை சமூகத்திற்கு வழங்குவதாக ஐ.நா. செயற்குழு உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, வலிந்து
காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொணர்வதற்காக இலங்கை
அரசாங்கத்திற்கு தேவையான எந்தவொரு தொழில்நுட்ப ஆதரவையும் வழங்க தாம் தயாராக
இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மற்றுமொரு
முக்கியமான விருந்தினராக, அம்னஸ்டி
இன்டர்நேஷனலின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளரான ஸ்மிருதி
சிங் கலந்து கொண்டார். நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம்
வெளியிடும் கருத்துகளுக்கும், பொறுப்புக்கூறல் விடயத்தில் நடைமுறையில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளியை ஸ்மிருதி சிங்
சுட்டிக்காட்டினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்
தீர்மானிப்பது, அதற்குப்
பொறுப்பானவர்களை அடையாளம் காண்பதில் இருந்து பிரிக்க முடியாது என்றும் அவர்
வலியுறுத்தினார்.
பல
ஆண்டுகளுக்கு முன்னர் தமது பிள்ளைகளைத் தேடத் தொடங்கிய தாய்மார்கள் இன்று வயது
முதிர்ந்துள்ளனர். சிலர் தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற பதிலை அறியாமலேயே
உயிரிழந்துவிட்டனர். இன்னும் சிலர் அதே புகைப்படங்களை ஏந்தியபடி, அதே
கேள்வியைக் கேட்டபடி தொடர்ந்து போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர். 2006ஆம் ஆண்டு
தனது மகன் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறிய ஒரு தாய், இந்த அனுபவத்தை நம்பிக்கைக்கும் துயரத்திற்கும் இடையில் இடைநிறுத்தப்பட்ட
வாழ்க்கை என
விவரித்தார். ஏறக்குறைய இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டபோதிலும், யாராவது
தமது வீட்டை நோக்கி வருவதைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவர் கதவை நோக்கிப்
பார்க்கிறார்—ஒருநாள் தனது மகன் திரும்பி வந்துவிடக்கூடும் என்ற ஏக்கத்துடன். இறுதிக்கட்டப்
போரின்போது தமிழ் மக்களைக் கைவிட்ட சர்வதேச அமைப்புகளும் தமது செயல்களுக்குப்
பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அந்தத் தாய் வலியுறுத்தினார்.
காணாமலாக்கல்
விவகாரத்தை வெறுமனே ஒரு நிர்வாகப் பிரச்சினையாகக் குறைத்து அணுகும் முறைகளை
குடும்பங்கள் மீண்டும் ஒருமுறை நிராகரித்தனர். இழப்பீடு, காணாமற்போனமைக்கான
சான்றிதழ்கள் அல்லது அரச நிறுவனங்களின் அங்கீகாரங்கள் எதுவும் தமது
அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமைக்கு மாற்றாக அமைய
முடியாது என்பதை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின்
கோரிக்கைகள் இன்றும் உண்மையையும் பொறுப்புக்கூறலையும் மையமாகக்
கொண்டவையாகவே உள்ளன.
“நாம்
பற்றிவைத்திருக்கும் நினைவுகள்” கண்காட்சி
மாநாட்டைத்
தொடர்ந்து, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுகளைப் பாதுகாத்து, அவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் “நாம் பற்றிவைத்திருக்கும்
நினைவுகள்” என்ற தலைப்பிலான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்குச் சொந்தமான தனிப்பட்ட பொருட்கள் இந்தக் கண்காட்சியில்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவர்கள் அணிந்த ஆடைகள், கைக்கடிகாரங்கள், கையடக்கத்
தொலைபேசிகள், எளிய
ஆபரணங்கள், புத்தகங்கள், செருப்புகள்
மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய ஏனைய பொருட்களும் அவற்றில் அடங்கின. இந்தப்
பொருட்கள் வெறுமனே அன்றாட உடைமைகளாக இருக்கவில்லை. தமது நிலை மற்றும் இருப்பிடம்
இன்றுவரை தெரியாத நிலையில் உள்ள மனிதர்களின் நினைவுகள், அடையாளங்கள்
மற்றும் வாழ்க்கைக் கதைகளை அவை தாங்கி நின்றன. இந்தப் பொருட்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்ததன் மூலம், குடும்பங்களுக்கு
தங்களது அன்புக்குரியவர்களின் கதைகளை கண்காட்சிக்கு வருகை தந்தவர்களுடன்
பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவருக்கும் ஒரு வாழ்க்கை இருந்தது; ஒரு
குடும்பம் இருந்தது; தனிப்பட்ட
நினைவுகள் இருந்தன; சமூகத்தில்
அவர்களுக்கென ஒரு இடம் இருந்தது என்பதை இந்தக் கண்காட்சி வலுவாக நினைவூட்டியது.
நினைவேந்தலுக்கு
அப்பால்: நீதி என்றால் என்ன?
பல
தசாப்தங்களாக அரசாங்கங்கள் மாறியுள்ளன. ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. எனினும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் நிலை என்னவென்று அறிய
முடியாத நிலையில், அவர்களது
புகைப்படங்களை ஏந்தியபடி அதே இடங்களில் தாய்மார்கள் இன்றும் நிற்கின்றனர். காலப்போக்கில்
காணாமலாக்கலால் ஏற்பட்ட காயங்கள் தாமாகவே ஆறிவிடும் என்ற எண்ணத்தையும் இந்தத்
தாய்மார்களின் போராட்டம் கேள்விக்குட்படுத்துகிறது. காலம் நினைவுகளை பழமையாக்கலாம்; ஆனால் என்ன
நடந்தது என்ற அடிப்படையான கேள்விக்கு அது பதிலளிப்பதில்லை.
காணாமலாக்கல்
சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது வெறுமனே அறிவிப்புகளையும்
பொறிமுறைகளையும் உருவாக்குவதைக் கடந்து, உறுதியான முடிவுகளை நோக்கி நகர்வதாகும். நம்பகமான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்; ஆதாரங்களை அணுகுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள்
அடையாளம் காணப்பட வேண்டும்; குற்றங்களுக்கு
பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்; குடும்பங்களும்
சாட்சிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்; அர்த்தமுள்ள இழப்பீடுகளும் நிவாரணங்களும் வழங்கப்பட
வேண்டும். எல்லாவற்றிற்கும்
மேலாக, பல
ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தைத் தமது தோள்களில் சுமந்து வரும் மக்களின் குரலுக்கு
செவிசாய்ப்பதே அவசியம்.
காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் தமது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர்.
உண்மை புதைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் நிதியுதவியைக் கோரவில்லை. தமது
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே அவர்கள் கேட்கிறார்கள்.
அவர்களின்
கேள்வி அரசாங்கங்களையும், ஆணைக்குழுக்களையும், பல தசாப்த
கால மௌனத்தையும் கடந்து இன்றும் உயிருடன் இருக்கிறது:
அவர்கள்
எங்கே?
இந்தக்
கேள்விக்கு பதில் கிடைக்கும் வரை, நீதிக்கான நீள் பயணம் நிறைவடையாது.
Act Now
செப்டம்பர் 2, 2026











Comments
Post a Comment